கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்… தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பர்கூர் என்ற தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைப்பெற்ற என்சிசி முகாமில் அப்பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் 13 மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்த மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் இருந்து “போலி என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள்” என்ற தலைப்பில் வெளியான செய்தியை தொடர்ந்து, இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நியாயமான, விசாரணையை உறுதி செய்யுமாறு சென்னை டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு, காவல்துறை 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்