திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடக்க இருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5ம் நாள் விழாவில் நாச்சியார் திருக்கோலத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் இருபுறமும் திரண்ட நிலையில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களை எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கருட சேவையை காண 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆயிர கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்கள் கருட சேவையை காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.