கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கிள்ளது.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா திட்ஷித் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒற்றுமையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதில், ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல. ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே.
கல்வி நிலையங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு ஆகும். அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கிள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

















