தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று(மார்ச்.15) நடைபெற்றது. இதில், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், திங்கள் இதழுக்கு என மொத்தம் 21 விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ‘திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழன் ஆட்சியாக நாங்கள் நடத்தி கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்று கூறுவது உங்கள் அனைவரையும் சேர்த்துதான். கடந்த 10 மாத கால ஆட்சியில் பைந்தமிழுக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்த அரசு தமிழக அரசு.
தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் மறைந்தாலும் அவர்கள் படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள் இனி தாங்கள் வாழும் காலங்களிலேயே பெருமைப்படுத்தப்படுவார்கள். தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம்; 3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்.
தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இனி ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் கலைஞர் விருது வழங்கப்படும், ‘ என தெரிவித்துள்ளார்.