கொடியேற்றத்துடன் துவங்கிய பரலோக மாதா ஆலயம்.. ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு..!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பேராலயத்தில் வீரமாமுனிவர் பங்குகுருவாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விண்ணேற்பு பெருவிழா மிகவும் புகழ் பெற்றது. தமிழகம் , உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் விண்ணேற்பு பெருவிழாவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான விண்ணேற்பு பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடைபெற்றது. தொடர்ந்து, கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன.
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியை ஆசீர்வதித்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருச்சி மறை மாவட்ட அருட்திரு ஆல்பர்ட், அம்பை மறை மாவட்ட அதிபரும், கல்லிடைக்குறிச்சி பங்கு தந்தையுமான அருட்திரு அருள் அந்தோணி, பாளை மறைமாவட்ட அதிபரும், அளவந்தான் குளம் பங்கு தந்தையுமான அந்தோணி வியாகப்பன் ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினர்.
இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடைபெற்றது. கொடியேற்று விழாவையொட்டி, வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
10ஆம் திருநாளான ஆக. 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனி சாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து, நற்கருணை பவனி கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள் உள்பட சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்