ஒரே ஒரு போன் கால்..! பரபரப்பான மயிலாடுதுறை..! சிக்கிய நபர்..!
மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பழைமைவாய்ந்த மணிக்கூண்டு, காமராஜர் பேருந்து நிலையம் மற்றும் பட்டமங்கலத்தெருவை இணைக்கும் வகையில் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் நினைவாக 1943-ஆம் ஆண்டு நீடூரைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது.
இங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 100-ஐ நேற்று மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக போலீஸார் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மிரட்டல் விடுத்தது சீர்காழி செம்பதனிருப்பு ராமர்கோயில் தெருவை சேர்ந்த சிவசங்கரன் மகன் சரவணன்(37) என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், அடிக்கடி தான் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சரவணனைக் கைது செய்த மயிலாடுதுறை போலீஸார் அவரது உடல்நிலையைக் கருதி காவல்துறையினரே அவரை பிணையில் விடுவித்தனர்.
– லோகேஸ்வரி.வெ