“ஒரு குகையில ஒரு சிங்கம் தான்.. என் வழி தனி வழி”
பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உட்பட 82 பேர் பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் மேலும் கட்சி பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு அறிவுறுத்தினார்.
நிறைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்..
Discussion about this post