மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதுக்குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது:
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையே இன்னும் மத்திய அரசு நடத்தவில்லை, இதனிடையே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே மசோதா அமலாகும் என மத்திய அரசு கூறுவது துரோகம். ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தவறிய நாடு இந்தியா மட்டுமே.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமா? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் அமலாக்கத் தேதி குறித்த தெளிவற்ற வாக்குறுதியுடன், மசோதா இன்று தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.