திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடல் மற்றும் அதனை அடுத்துள்ள மேற்கு மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்துள்ளது.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதையும், வெள்ளநீர் செல்வதை வேடிக்கை பார்ப்பதையும், தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
