விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்தார். ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அறிந்த ஹரிஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். பிறகு அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால், ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்துள்ளனர். அத்துடன் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து சமீபத்தில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, திமுகவை சேர்ந்த 2 பேர், கூலி தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில்,விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன், கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா?’ என பதிவிட்டுள்ளார்.