அள்ள அள்ள தங்கம்.. புதையல் தானா? தொல்பொருள் துறை ஆய்வு..!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதி அரசியல் கலவரங்களுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் வெடிகுண்டுகள் சர்வ சாதாரணமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து பலியானவர்களும் உண்டு. இதனால் சமீப காலமாக கண்ணூரில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஏதாவது ஒரு பொருள் கிடந்தால் யாரும் அதன் அருகே கூட செல்வது கிடையாது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கண்ணூர் அருகே செங்களாயி பகுதியிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழில் உறுதித்திட்ட பெண்கள் மழைநீரை தேக்குவதற்காக குழிகளை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் இருந்து ஒரு பழங்கால குடம் கிடைத்தது.
அதைப் பார்த்த அனைவரும் அது வெடிகுண்டாக இருக்கும் என்று அச்சம் அடைந்து ஓடியுள்ளனர். ஆனால் தைரியமாக ஒருவர் அதை எடுத்து தூக்கி வீசினார். அப்போது வெடிப்பதற்கு பதிலாக அந்தக் குடம் இரண்டாக உடைந்தது. அதற்குள் ஏராளமான தங்கப் பதக்கங்கள், முத்துமணி, கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன.
பின்னர் அது ஒரு புதையல் என்று அவர்களுக்கு தெரியவந்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பொருட்களை கைப்பற்றி எப்படு வந்தது என்பது குறித்து தொல்பொருள் துறை மூலம் ஆய்வு நடத்த வருகின்றனர்.
-பவானி கார்த்திக்