ஜம்மு காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் நாட்டுடன் பல உறவுகளை துண்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதில், ஒரு பகுதியாக அட்டாரி வாகா பார்டரை மூட இந்தியா மூடப்படுகிறது. அம்ரிஸதரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த பார்டர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் மே 1ம் தேதிக்கு தங்கள் நாட்டுக்குள் திரும்பி விட வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் நடைபெற இந்த பாதைதான் முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது. அதே போல, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இந்த பாதை வழியாகவே வர்த்தகம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 3,886 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த பாதை வழியாக இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 71 ஆயிரம் மக்கள் இந்த பாதை வழியாக இரு நாடுகளுக்கும் வந்து சென்றுள்ளனர். இந்தியா இந்த பாதை வழியாகத்தான் கோதுமை, சோயாபீன்ஸ், கறிக்கோழி, கோழி தீவனங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்தது.‘
பாகிஸ்தானில் இருந்து பழங்கள், உலர் பழங்கள், ஜிப்சம், சிமிண்ட், கல் உப்பு போன்றவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வந்தது. இனிமேல், இந்த வர்த்தகம் நிறுத்தப்படுவதால், இரு நாடுகளிலும் உள்ள ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதோடு, தெற்காசிய நாடுகள் அமைப்பான சார்க் நாடுகள் விசா சலுகையில் இருந்து பாகிஸ்தானியர்கள் விலக்கப்பட்டுள்ளனர். இந்த அனுமதியில் இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு , நேபாளம் ஆகிய 8 நாடுகள் உள்ளன.
இந்த சார்க் நாடுகளின் எல்கைக்குள் எம்.பிக்கள், விளையாட்டு வீரர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் , வணிகர்கள், முக்கிய அதிகாரிகள் என 24 பிரிவினர் விசா இல்லாமலேயே சிறப்பு அனுமதி பெற்று பயணிக்க முடியும். தற்போது, இந்த சிறப்பு சேவை பாகிஸ்தானியர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு இந்த சலுகையை பாகிஸ்தானியர்கள் அனுபவித்து வந்தனர்.
விசா ஸ்டிக்கர் என்று அழைக்கப்படும் இந்த டிராவல் ஆவணங்களை கொண்டு ஒரு வருட காலம் இந்தியாவுக்கு வந்து செல்ல முடியும். இந்த முறையை இந்தியா ரத்து செய்திருப்பதும் முதன்முறை ஆகும். அதாவது, இனிமேல் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ளவே மாட்டோம் என்பதை இஸ்லாமாபாத்துக்கு உணர்த்துவதற்காகவே இந்தியா இத்தகைய அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.