ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிர் இழந்தனர். இதை அடுத்து மத்திய அரசு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவால் சிந்து நீர் பகிர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி பாகிஸ்தான் செல்லும் நீரை நிறுத்தமுடியுமா?
கடந்த 1948-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போத, சிந்து நதி நீரும் நிறுத்தப்பட்டது. தங்கள் நாட்டிற்கு வர வேண்டிய நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்துகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்ட, சமரசம் பேசிய உலக வங்கி, சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான் இடையில் பாயும் சிந்து, செனாப், ஜீலம், பீஸ், ரவி மற்றும் சட்லஜ் என்ற 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ளும் விதிகள் வகுக்கப்பட்டன. 1960-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அய்யூப் கான் இருவரும் இது தொடர்பான கையெழுத்திட்டனர்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, கிழக்கு பகுதியில் உள்ள ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு பகுதியில் உள்ள சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் கட்டுப்பாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
இந்த நதி நீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கூறப்பட்ட நதிகளிலிருந்து கிட்டத்தட்ட 80 சதவீத நீரை பாகிஸ்தானே பெறுகிறது. இந்த நீரைக்கொண்டுதான், பஞ்சாப், சிந்து மற்றும் இதர பகுதிகளில் பாகிஸ்தான் விவசாயம் செய்துவருகிறது.
இதனால் , சிந்து நதியில் இந்தியா அணை கட்டவோ தண்ணீரை திசை திருப்பவோ முடியாது. ஆனால், இப்போது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், இந்தியா சிந்து நதியை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பாகிஸ்தானில் சிந்து நதி மூலம்தான் பல மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இதனால், பாகிஸ்தானின் மொத்த விவசாய உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் சிந்து நதி நீரை நம்பியே நடக்கிறது. சிந்து நதி நீரை கொண்டு பாகிஸ்தான் தங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி போன்றவற்றை விளைவிக்கிறது.
இதனால் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தும் பட்சத்தில் அங்கு விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படக்கூடும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, மழைப்பொழிவு குறைவு ஆகியவற்றால் விவசாய பொருட்கள் உற்பத்தி குறைவு ஆகிய சிக்கலில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.