சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள்..!!
சட்டசபையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு நகராட்சித்துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில்
வளர்ந்து வரும் நகர்புற வளர்ச்சி, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் ஆன்மீக சுற்றுலா தளங்கள், நகரத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கு தேவைப்படும் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நகர்புற உள்ளாட்சிகளின் தரத்தை உயர்த்தியுள்ளது. இதுவரை, 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் சில ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சிகளை, அருகிலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.
16 மாநகராட்சிகளுடன் 149 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளும் 41 நகராட்சிகளுடன் 146 ஊராட்சிகள், 1 பேரூராட்சியும்
25 பேரூராட்சிகளுடன் 29 ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 29 ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளாகவும்,
7 பேரூராட்சிகள் 7 நகராட்சிகளாகவும், 22 ஊராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் சேர்ந்து 6 நகராட்சிகளாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை முடிவுறும்போது, நகர்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகளாகவும், 146 நகராட்சிகளாகவும், 491 பேரூராட்சிகளாகவும் இருக்கும்.
நகர்புற உள்ளாட்சிகளில் பொதுமக்களின் சிறப்பான போக்குவரத்தினை உறுதி செய்யும் நோக்குடன் கடந்த நான்காண்டுகளில் ரூ.10,980 கோடி மதிப்பீட்டில் 17,774 கி.மீ. நீளத்திற்கு சாலைப் பணிகள் முடிக்கப்பட்டும், 1,280 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.8,039 கோடி மதிப்பீட்டில் 380 குடிநீர் திட்டம் மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டும், 1,220 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.5,171 கோடி மதிப்பீட்டில் 2,253 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டும், 460 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.6,986 கோடி மதிப்பீட்டில் 42 பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டும் 51 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.1,002 கோடி மதிப்பீட்டில் 111 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.1,833 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள், வள மீட்பு மையங்கள், தனி நபர் கழிப்பிடங்கள், சமுதாய மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ளிட்ட பணிகளில் 11,340 பணிகள் முடிவுற்றும் 1,799 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.858 கோடி மதிப்பீட்டில் இதுவரை 7,10,000 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் LED விளக்குகளாக (ஆற்றல்மிகு ஒளி உமிழும் விளக்குகளாக – Light Emitting Diode) மாற்றப்பட்டுள்ளன.
ரூ.1,564 கோடி மதிப்பீட்டில் 107 புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவுற்றும், 110 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.932 கோடி மதிப்பீட்டில் 153 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டும், 77 சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.242 கோடி மதிப்பீட்டில் 92 அறிவுசார் மையங்கள் மற்றும் 44 நூலகங்கள் கட்டி முடிக்கப்பட்டும்; 10 அறிவுசார் மையங்கள் மற்றும் 134 நூலகப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.838 கோடி மதிப்பீட்டில் 1,145 நீர் நிலைகள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தி சீரமைக்கப்பட்டும் 152 நீர் நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.436 கோடி மதிப்பீட்டில் 920 புதிய பூங்கா மற்றும் அபிவிருத்திப் பணிகள் முடிக்கப்பட்டும், 197 பூங்கா பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
ரூ.412 கோடி மதிப்பீட்டில் 230 நவீன எரிவாயு தகன மேடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ரூ.338 கோடி மதிப்பீட்டில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலக கட்டடங்கள் 27 கட்டி முடிக்கப்பட்டும், 74 பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
சென்னை தவிர பிற நகர்புற உள்ளாட்சிகளில் ரூ.398 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் மூலம் தேக்கத் திடக்கழிவுகள் அகற்றி, நிலத்தினை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு நகரங்களில் முடிவுற்றும், சில நகரங்களில் நடைபெற்றும் வருகின்றன. இப்பணிகள் முடியும் போது 692 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.
ரூ.554 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 8,285 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை தவிர நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய கூடங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இதர பல்வேறு பணிகளுக்கு ரூ.3,001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
நகர்புற உள்ளாட்சிகளின் மின் கட்டணம், குடிநீர் விநியோக கட்டணங்கள், பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.5,300 கோடி நகர்புற உள்ளாட்சிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், கட்டட அனுமதி, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ஆகியவற்றை பொதுமக்கள் இணையதளம் மூலம் எளிதாக பெறும் வகையில் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இராமநாதபுரம், விவசாயம் சார்ந்த வணிகம், அபரிதமான தொழில் வளர்ச்சியினை கொண்டுள்ள பெரம்பலூர் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.