“உன்னை மேடையில் சந்திக்கிறேன்” என இளையராஜா ட்வீட் செய்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளில் இசை கச்சேரிகள் நடத்தி வருகிறார். இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் ‘ராக் வித் ராஜா’ என்ற இசைக்கச்சேரி வரும் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவுடன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்து பாடல்களை பாடவுள்ளனர்.
இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது கனவு நனவாகப் போகிறது” எனக் குறிப்பிட்டு இத்தகவலை பதிவிட்டுள்ளார். இதனை ரீட்வீட் செய்த இளையராஜா “உன்னை மேடையில் சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.