பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பகவந்த் மான் எனக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கும் நான் தான் முதல்வர் என்று பதவியேற்பு விழாவில் பேசியுள்ளார்.
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பகவந்த் அவருடைய சொந்த கிராமமான கத்கர் கலனில் இன்று பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பஞ்சாபின் புதிய முதல்வராக பதவியேற்றப் பின் பேசிய பகவந்த், “பஞ்சாப் மாநில மக்கள் அனைவருக்கும் நான் முதல்வர். எனக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கும் நான் தான் முதல்வர். ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். பஞ்சாப் மாநில மக்களிடம் திமிராக நடந்து கொள்ளாதீர்கள்.
பஞ்சாப் மாநிலத்தின் விவசாயத்தை மேம்படுத்த நாம் உழைப்போம். வேலையில்லா திண்டாடத்தை ஒழித்து, புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவோம். நாம் அனைவரும் பஞ்சாபிற்காக உழைப்போம். பஞ்சாப் மாநிலத்தில் படிந்துள்ள ஊழல் என்னும் கரையை அகற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பொறுப்பேற்ற பகவந்த் மன்க்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.