சூர்யா சிவா பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய போது, யாரவது அரசியல்வாதியாக வேண்டுமென்று நினைப்பவர்களை பாஜகவில் கொண்டு போய் விட்டால் வாழக்கையே வெறுத்து ஓடிவிடுவார்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
பாஜக கட்சியில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த சூர்யா சிவா அண்மையில் அந்த கட்சியிலுள்ள பெண் நிர்வாகியான டெய்சியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாஜக தமிழ்நாடு கட்சி சார்பில் அவரை கட்சி சார்ந்த நிகழ்வில் பங்கு பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர், செய்தியாளர் சந்திப்பில் சூர்யா சிவாவும், டெய்சியும் பேசிய பொழுது எங்கள் உறவு அக்கா தம்பி உறைவை போன்றது என்று சமாதானம் தெரிவித்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவரே பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பில், அண்ணாமலைக்கு நன்றி கூறிவிட்டு பாஜகவிற்கு வாழ்த்துக்களும் தெரிவித்துவிட்டு கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், கட்சியிலுள்ள சில முக்கிய நிர்வாகிகளை சுட்டி காட்டி பேசியுள்ளார். அதில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,அண்ணாமலைக்கு நெருக்கமான பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோரை குற்றம் சாட்டியுள்ளார். அதில் கேசவ விநாயகம் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டால்தான் பாஜக தமிழ்நாட்டில் வளரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமாவிற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோரும் காரணம் என்று குற்றம் சாட்டினார். இது குறித்த பேட்டி ஒன்றில் பேசிய போது, யாராவது அரசியல்வாதி ஆகவேண்டும் என்று நினைப்பவர்களை பாஜகவில் சேர்த்து விட்டால் வாழ்க்கையே வெறுத்து ஓடி விடுவார்கள் என்றும் மற்ற கட்சிகள் அவர்களின் எதிரிகளையே குறி வைத்து தாக்குவார்கள் ஆனால் பாஜகவில் சொந்த கட்சிக்காரரையே தலை தூக்க விடாமல் அடிப்பார்கள், யாரும் வளர்ந்து விட கூடாது என்று நினைக்கின்றனர். இது போன்ற செயல்களேதான் பாஜகவால் தமிழநாட்டில் வளர முடியவில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.