ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை, அவரது உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
இதனை தொடர்ந்து, விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று(மார்ச்.21) காலை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகினார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
மேலும் அவர் தனது வாக்கு மூலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரெயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன்; அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை.
2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டேன், மறுநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்று அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் எனக்கு தெரியாது.
ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற முறையில் ஆணையத்தின் கோப்பில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் என ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.