வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(மார்ச்.21) புயலாக வலுப்பெற்று அந்தமான் நிகோபார் தீவுகளை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(மார்ச்.21) முதல் வருகிற 24ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று(மார்ச்.21) அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கி.மீ வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை(மார்ச்.22) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.