சேலம் என்றாலே நினைவு வருவது மாம்பழம். மாம்பழ சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. மாம்பழ வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் மாங்காய்களை செயற்கையான முறையில் பழுக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது . குறிப்பாக எத்திப்பான் ரசாயனத்தை தெளிப்பான்கள் மூலம் நேரடியாக மாங்காய்களின் மீது தெளிப்பது, மாங்காய்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்துவது போன்ற செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதனைத் தொடர்ந்து மாம்பழ மொத்த வியாபாரிகளுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்த , மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன், அவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்படி மாங்காய்களை எவ்வாறு பழுக்க வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாம்பழம் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் விளக்கினார்.
பொதுமக்களும் பழங்களை வாங்கும் போது நன்றாக சோதித்து பார்த்து வாங்க வேண்டும் என்றும் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களில் சுவை , மனம் , நிறம் முற்றிலும் குறைவாக இருக்கும்.
மேலும் பழங்கள் மீது கருப்பு நிற வட்டம் காணப்படும். அதை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பழங்கள் என கண்டறிந்து , பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வயிற்றுப்போக்கு , வாந்தி ,
வயிற்று எரிச்சல் , நரம்பு மண்டலம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கடைசிக் கட்டத்தில் புற்றுநோய் கூட வர நேரிடும். இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.
எத்திப்பான் ரசாயன தெளிப்பு முறையில் வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் பழங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.