ஈரோடு எம்பி கணேச மூர்த்தியின் வரலாறு…!! ஒரு பெருவாழ்விற்கு முற்று புள்ளி..!!
கணேச மூர்த்தியின் அரசியல் வகுப்பு :
ஈரோடு அருகில் உள்ள பூந்துறையில் ஒரு முன்னணி விவசாய குடும்பத்தின் மகனாகப் பிறந்தவர் கணேச மூர்த்தி. அவர் தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சென்னிமலை அருகில் உள்ள தனது தாய்மாமன் ஊரான உலகபுரத்தில் பள்ளி படிப்பை முடித்தார்.
அப்பொழுது தனது தாய் மாமன்களில் ஒருவரான உலகபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னணி சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில் இராம் மனோகர் லோகியா மதுலிமாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பெரும் தலைவர்கள் அடிக்கடி உலகபுரம் வருவதும் ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடுவது போன்ற அரசியல் வகுப்புகள் அங்கு நடைபெற்றுள்ளது.
அதில் பங்கேற்று அரசியல் அறிவைப் பெற்றதாக திரு கணேசன் மூர்த்தி அவர்கள் அடிக்கடி தெரிவிப்பார். தனது மாமனின் வழிகாட்டலில் கல்லூரிக்கு சென்று படித்து பிறகு சட்டக் கல்லூரியில் படிப்புக்காக இணைந்தார்.
கல்லூரிக்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் பொறுப்பேற்றார்.
அதே காலத்தில் கணேச மூர்த்தி அவர்களும், செஞ்சி இராமச்சந்திரன், கரூர் சின்னசாமி ஆகியோர் சட்டக் கல்லூரியில் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்து தென் மழியின் வாசகர்களாகவும் ஆதரவாளர்களாகவும் செயல்பட்டவர்கள்.
தனது கல்லூரி காலத்தில் வைகோ அவர்களை சட்டக் கல்லூரி தேர்தல் களத்தில் இணைத்து இருவரும் அரசியலில் இணைந்தவர்கள். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சியில் போட்டியிட்டதன் மூலம் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தவர்.
அதே காலத்தில் மிகத் தீவிரமாக இருந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கத்திலும் திரு கணேசன் மூர்த்தி அவர்கள் போராட்டங்களில் கலந்து கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் அவர் மீது போடப்பட்டது.
தனது அரசியல் வாழ்வை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுதிப்படுத்திக் கொண்ட கணேஷ் மூர்த்தி அவர்கள் சிறிய வயதிலேயே மாவட்ட செயலாளரான பொறுப்புக்கு வந்தார்.
பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுதிமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். கெய்ல், ஐடிபிஎல், உயர் மின் கோபுரம் இதுபோன்ற வேளாண் துறையை பாதிக்கின்ற போராட்டங்களில் முன்னணியில் நின்று விவசாய இயக்கங்களை இணைத்து போராட்டத்திற்கு வலுச் சேர்த்தவர்.
இன்னொரு பக்கம் தமிழீழப் போராட்டத்தை மிக உறுதியோடு ஆதரித்து தமிழீழ விடுதலைக்கு பெரும் துணையாக நின்றவர். அதனால் பொடா சட்டத்தில் 18 மாத காலம் சிறையிலும் இருந்தவர். அமைதி, பொறுமை, யாரிடமும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாத பண்பு, மக்களிடம் அன்பு இவைகள் தான் கணேசமூர்த்தி அவர்களின் அடையாளம் .
மக்கள் இன்றைக்கும் அவரை இவ்வளவு நேசிப்பதற்கு காரணம் தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் எந்த அடாவடித்தனமும் செய்யாமல் உயரிய பண்பாட்டை பின்பற்றியவர். அவர் எடுத்த தவறான முடிவு அவர் மீது அன்பும் பாசமும் கொண்ட அனைவரையும் மிகவும் வருத்தத்திற்கும் கலக்கத்திற்கும் ஆளாக்கிவிட்டது.
கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் கூட மிகப் பெரிய அன்பையும் பாசத்தையும் அவர் மீது வெளிப்படுத்தியது கடந்த மூன்று நாட்களில் மிக அதிகமாக தெரிய வந்தது. அவரோடு 1988 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் வாழ்க்கையில் இணைந்த நாங்கள் கடைசி 20 ஆண்டு மிக நெருக்கமாக இருந்து செயல்பட்டோம்.
அவரோடு இணைந்து அரசியல் களத்தில் பயணித்த வாழ்க்கையை என்றும் மறக்க முடியாது.
ஒரு மாபெரும் ஆளுமை இன்று காலமாகிவிட்டார். ஒரு தவறான முடிவை எடுத்து ஒரு சரியான பெரு வாழ்வை நிறைவு செய்த அவரது வாழ்வு மதிப்பிற்குரியது. ஆனால் அவரின் இந்த தற்கொலை முடிவு பெரும் வருத்தத்திற்குரியது.
கணேச மூர்த்தி அவர்களின் இழப்பை மறக்க அதிகமாகலாம். ஆனால் அவரின் தொண்டு மறக்க முடியாத ஒன்று. கணேசமூர்த்தி அவர்களுக்கு மதிமுகம் குடும்பம் சார்பாக இறுதி வணக்கம் செய்கின்றோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..