தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை..! இனி பறக்கும் பயணம்..!
தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல இப்போது கார், பஸ், ரயில், விமானம் என்று பல வகை போக்குவரத்து வசதிகள் உள்ளன. விரைவில் இந்த லிஸ்டில் ஹெலிகாப்டரும் இணைய இருக்கிறது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் ஹெலிகாப்டர் மூலம் செல்லும் வழிமுறைகளை உருவாக்கி, அதற்கான அரசாணையை வெளியிடத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழகத்திற்குள் இந்த ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை கீழ் தமிழகம் முழுக்க பயன்படுத்தப்படாமல் இருக்கும். சுமார் 80 ஹெலிபேடுகளைப் பயன்படுத்த ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு அனுமதி தரப்படும் என்று இதன் மூலம் நகரங்களுக்கு இடையே மிக வேகமாகச் சென்று வரும் சூழல் உருவாகும் என சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஹெலிபேடுகளை புக் செய்வது, பராமரிப்பது ஆகியவற்றை எளிதாக்கும்.. தமிழகத்திற்குள் ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் இந்த முடிவு விமான நிறுவனங்களுக்குப் பயனளிப்பது மட்டுமின்றி.. சாமானியர்களும் குறைந்த விலையில் ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தும் சூழலை ஏற்படுத்தும். மேலும் இது உள்ளூர் உற்பத்தித் துறையை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்” என்றார்.
இத்திட்டத்தில் டிட்கோ அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிபேடுகளே அதிகளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஹெலிகாப்டர்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய இடங்களை அடையாளம் கண்டு அங்கு ஹெலிபேடுகளை அமைக்கவும் டிட்கோ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணமே இதற்கு வசூலிக்க டிக்டோ திட்டமிட்டுள்ளதாக சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.