தமிழகத்தில் மருத்துவத் துறையின் நிலை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் எவ்வாறு உங்கள் துறை மீது கவனம் செலுத்துகிறீர் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர்:
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையை பார்க்கும்போது, இவர் எப்படி முதலமைச்சராக இருந்தார் என தோன்றுகிறது. கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் இருந்தும் ஒரு சின்ன விஷயத்தை சரியாக பார்க்கும் தன்மை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. விளையாட்டுத்துறை பயிற்சியாளர் என என்னை விமர்சித்ததற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களோடு இருப்பவர்கள் எல்லாம் 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். நான் 4 மணிக்கு எழுந்து நடப்பது அவருக்கு வயிற்றெரிச்சலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் மருத்துவத்துறை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை நான் இரண்டரை ஆண்டுகளில் செய்திருக்கிறேன். நான் இந்த இரண்டரை ஆண்டுகளில் செய்துள்ள பணிகளை பட்டியல் போட்டுத் தருகிறேன். 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை பட்டியல் போட்டுத் தரட்டும். என்னை விட அதிகமாக மருத்துவமனைகளில் ஆய்வு செய்து பணியாற்றி இருந்தால் அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன்.
பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தன. இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருக்கிறது. நாய் கடிக்கு மருந்தில்லை என்று ஈபிஎஸ் சொல்லி உள்ளார். உங்களுக்கு எங்கேயாவது நாய் கடித்தால் நீங்கள் ஆரம்ப சுகாதார மையங்களிலேயே ஊசி போட்டுக் கொள்ளலாம். இந்த வசதி கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத்தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.