”அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு”… 700 சமையல் கலைஞர்கள்… இளநீர் இட்லி முதல் மஸ்ரூம் பள்ளி பாளையம் கிரேவி வரை…!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ”அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” இன்றும், மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதற்கான கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மாநாட்டுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஆதீனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நாட்களுக்கு மூன்று நேரம் இலவச உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்யேகமாக எட்டு இடங்களில் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, 3வேளையும் பக்தர்களுக்கு சமைப்பதற்காக 700க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதில் இளநீர் இட்லி, தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல், நெய், பொடி ரோஸ்ட், பன்னீர் பூஜ்ஜியா, மோதி பூரி ஆகியவை காலை உணவாகவும், மதிய உணவாக சாதம், சம்பார், ரசம், புளிக்குழம்பு, தயிர், அப்பளம், உருளைக்கிழங்கு கூட்டு, வடை, வெண்டைக்காய் பொரியல், முட்டைக்கோஸ் பொரியல், ஊறுகாய், பருத்திப்பால் அல்வா, பாயாசம், தண்ணீர் பாட்டில் என பல்வேறு வகை உணவுகள் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு உணவு ஹாட் பாம்பே ஜாங்கிரி, பனைவெல்லம் மைசூர்பா, வெஜ் மஞ்சூரியன், மினி ஆனியன் சமோசா, தக்காளி சாஸ், காஞ்சிபுரம் இட்லி, கருவேப்பிலை குழம்பு, மைசூர் மசாலா தோசை, வெஜ் ஆம்லெட், உடுப்பி கி சாம்பார், செட்டிநாடு கார சட்னி, ஆம்பூர் வெஜ் மட்டம் தம் பிரியாணி, மஸ்ரூம் பள்ளி பாளையம் கிரேவி, சாமை அரிசி தயிர் சாதம் ஆகியவை என் தடல்புடலாக ரெடியாகி வருகிறது.
-பவானி கார்த்திக்