9 அடி நீளமுள்ள இரும்பு ராடு.. தண்டவாளத்தில் வைத்த நபர் போலீசில் சிக்கியது எப்படி..!
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். 21 வயதாகும் இவருக்கு, தண்டாவளத்தில் பெரிய கல்லை வைத்தால், ரயில் கவிழுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
விளையாட்டாக எழுந்த இந்த சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்கு, வேலூர் மாவட்டம் முகுந்தராயபுரம் பகுதியில் இருந்த தண்டவாளத்தில், உண்மையாகவே, கற்களை வைத்துள்ளார்.
ஆனால், அப்போது அங்கு வந்த ரயில், அந்த கல்லை நசுக்கிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளது. இதனால், 9 அடி நீளமுள்ள பெரிய இரும்பு ராடை, அந்த தண்டவாளத்தில் அவர் வைத்துள்ளார். ஆனால், இவ்வாறு இரும்பு ராடு வைத்ததால், ரயில் நிலைய சிக்னல் பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தண்டவாளத்தில் இரும்பு ராடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இரும்பு ராடை நீக்கிய அதிகாரிகள், சதி வேலையை செய்தவர் யார் என்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், நவீன்குமார் தான் குற்றவாளி என்பதை அறிந்த ரயில்வே காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இரும்பு ராடு வைக்கப்பட்ட தண்டவாளத்தில், ரயில்கள் எதுவும் வராததால், பெரும் அசம்பாவிதம் முன்னரே தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்