பெரும்பாக்கத்தில் தனது பிறந்தநாள் அன்று அண்ணன் வராததால் 10ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் உதயகுமாரி (16). இவர், சித்தாலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம்(மார்ச்.12) உதயகுமாரிக்கு பிறந்தநாள் என்பதால் திருவண்ணாமலையில் உள்ள அவருடைய அண்ணன் சந்திரன் வந்தவுடன் தம்பிகளுடன் சேர்த்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தார்.
இதையடுத்து, புத்தாடை அணிந்து வீட்டில் எளிமையாக பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், அவரது பெற்றோர் இருவரும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், உதயகுமாரி பள்ளிக்கு செல்லாமல் தனது இரு தம்பிகளுடன் வீட்டிலேயே அண்ணன் வருகைக்காக காத்திருந்துள்ளார். ஆனால், மாலை வரை அவரது அண்ணன் வராததால் விரக்தியில் இருந்த உதயகுமாரி, வீட்டின் அறையில் நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு கொண்டார்.
இதனை பார்த்த வீட்டிலிருந்த சிறுவர்கள் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை கீழே இறக்கி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்சில் வந்த செவிலியர் பரிசோதித்து விட்டு மாணவி உதயகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘தனது பிறந்தநாளுக்கு அண்ணன் வராத விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா.. அல்லது வேறு ஏதாவது காரணமா?’ என விசாரித்து வருகின்றனர்.