அகிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2019ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர், காங்கிரஸில் இருந்து விலகினர். அந்த வகையில், தற்போது குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 5 பக்கங்கள் கொண்ட விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அதில், ராகுல் காந்தியின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தீவிரம் இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்ததால், கட்சியின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக குறைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குலாம் நபி ஆசாத், காஷ்மீரின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களைவைத் தலைவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வகித்தவர் ஆவார், மேலும், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி கொண்ட ’ஜி-23’ தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒருசில வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகி இருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.