ஒகேனக்கலில் அதிகரிக்கும் வெள்ளப்பெருக்கு..!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டது. மற்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஒக்கேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ