மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டால், அதனை ஓட்டியுள்ள பகுதிகளில், மழை பெய்வது என்பது வழக்கம். அந்த வகையில், தற்போது, தமிழகத்தில், மத்திய மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதியிலும், அதனை ஓட்டி அமைந்துள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், மேற்கு திசையில் காற்றின் வேக மாறுபாடும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில், சூறாவளிக் காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்