வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயது பெண் வெள்ளைப் புலி, உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,000-க்கும் மேற்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்கா என்று அழைக்கப்படும் இப்பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளை தொடர்ந்து கண்காணித்து அவற்றை பராமரித்து வருகின்றனர். கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் வண்டலூர் பூங்காவில் விலங்குகள் தொற்றால் பாதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 13 வயதான பெண் வெள்ளைப்புலி ஆகான்ஷா உடல் சோர்வுடன் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவர்கள் குழு நடத்திய பரிசோதனையில் புலிக்கு அடாக்சியா நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நோய் தாக்கத்தின் காரணமாக வெள்ளைப்புலி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததுடன் எந்தவித உணவையும் உட்கொள்ளாமல் சோர்வாக காணப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்களின் உதவியுடன் புலிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் புலியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நேற்று(மார்ச் 23) நள்ளிரவு 9 மணி அளவில் வெள்ளை புலி கூண்டில் இறந்து கிடந்ததாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பின்னர், வெள்ளைப்புலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.