ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (25). மனைவி அஞ்சலி (23). இவர்களுக்கு ரூத் (6), சமீரா (4) மற்றும் கங்கோத்திரி (2 மாதம்) ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக், இரும்பு மற்றும் பேப்பர் போன்றவற்றை சேகரித்து இரும்பு கடையில் விற்பனை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கங்கோத்திரி அழவே, உடனே சுரேஷ் எழுந்து குழந்தையை தூக்கினார். பின்னர் பால் கொடுப்பதற்காக மனைவியை எழுப்பியுள்ளார். அவர் எழும்ப மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் போதையில் இருந்த சுரேஷ் கோபத்துடன் சண்டை போட்டார். ஆத்திரத்தில், குழந்தை கங்கோத்திரியை தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அஞ்சலி மற்றும் சுரேஷ் ஆகியோர் குழந்தையை தூக்கி கொண்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை இறந்துவிட்டது.
தகவலறிந்து திருவள்ளூர் டவுன் எஸ்ஐ சத்யநாராயணன் மற்றும் காவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post