உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல் பாட திட்டங்களை மாற்றுவது என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் லஷ்மி பிரியா மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி,உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும். தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சியை மாணவர்கள் பெற வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்; அந்த வகையில், 25 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகத்தரத்துக்கேற்ப மாற்றப்பட உள்ளது, என கூறினார்.