ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்..!
31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை போராட்டம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நாளை (செப்.10) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைபடுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், கல்வி துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி, மாநில முன்னுரிமையாக கொண்டு வந்துள்ள 243 என்ற அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழக முழுவதும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பணிக்கு செல்லாமல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், இதில் தமிழக முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் வரும் செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்களும் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.