திருச்சி மாவட்டம், துவாக்குடியில் விபத்தில் காயமடைந்த மூதாட்டியை மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்.
திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள பரக்கத் நகரைச் சேர்ந்தவர் நூர்ஜஹான் (70). இவர் துவாக்குடி அருகே தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, தஞ்சையிலிருந்து நவல்பட்டு நோக்கிச் சென்ற கார் மோதி பலத்த காயமடைந்தார். அப்போது குத்தாலத்திலிருந்து திருச்சி வழியாக திருநெல்வேலி செல்ல துவாக்குடி அருகே வந்த மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ காயமடைந்த மூதாட்டிக்கு உதவும்படி தன்னுடன் வந்த துணை பொதுச் செயலர் ரோஹையா, திருச்சி தெற்கு மாவட்ட செயலர் மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோரைப் பணித்தார்.
இதையடுத்து அவர்கள், உடனடியாக நூர்ஜஹானை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருப்பினும் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் துவாக்குடி போலீஸார் மடக்கி அதன் ஓட்டுநரான நவல்பட்டை சேர்ந்த அன்புச்செல்வனை (39) கைது செய்து விசாரிக்கின்றனர்.