வைகோ-வை தொலைத்து விடாதீர்கள்..! அவர் நம்மை மீட்க வந்த மீட்பர்..!
வைகோ அவரது காலத்திற்கு பின்பும் நிறைய தேவைப்படுபவரா அல்லது தேவைகளுக்காக தேடப்படுபவரா..? அதாவது நம் தேவைகளுக்காக தேடபடுபவரா என்று பார்க்கலாம்..
மறுமலர்ச்சியில் திமுக அதிகம் தோற்ற கட்சி.., இதைச் சொல்வதில் நமக்கு வெட்கம் இல்லை. மறுமலர்ச்சியில் திமுக பிழைக்க தெரியாத ஒரு கட்சி. இந்த வார்த்தையை நாம் அதிகம் கேட்டிருப்போம்.
வைகோ ஒரு பிழைக்க தெரியாத மனிதர். கொஞ்சம் இறங்கிப் போனார் என்றால் அவர்தான் அங்கு கிங் என சொல்லலாம். வைகோ-விற்கு நிகர் எவரும் இல்லை., அவருக்கு நிகர் அவர் மட்டுமே., இது படித்த பண்டிதர்கள் நமக்கு வழங்கிய இலவச அட்வைஸ் என சொல்லலாம்
வைகோ அவரின் பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுத் தந்திருந்தால், அவர்தான் சி.எம் என அவரை விரும்புகிறவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம். என சொல்லாம்.
சரி., இதை ஏன் நான் சொல்லுறேன் என நீங்கள் கேட்கலாம்..? நான் மதிமுக., அதனால், பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
இதைப் படிக்கின்ற எங்கள் கட்சிக்காரர்கள் நீங்கலாக இருக்கலாம் அல்லது இல்லாதவறாக கூட இருக்கலாம்.., அப்படி இருக்கும் எவரையும் மதிமுகவிற்கு வாருங்கள் என நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை.
இது திமிர்வாதம் அல்ல. அதற்கு நிறைய சிரமப்பட பழகி இருக்க வேண்டும். இந்த இயக்கத்தில் பயணிப்பது மிக மிக சிரமம்., என்னை நம்பி வந்தால் மலர் பாதையல்ல., பாலைவனப் பயணம்தான்.., அதற்கு சித்தமானவர்களே வாருங்கள் என தலைவர் வைகோ சொல்லி இருந்தார்.
அதனால், எங்களுக்கு ஏமாற்றமில்லை. அதற்கு சம்மதித்து தான் நாங்கள் அவரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அரசியல் கட்சி தொடங்கப்படுவது ஏன் :
இப்படி கஷ்டப்பட்டு ஒரு அரசியல் கட்சி எதற்காக தொடங்க வேண்டும்..? காசு சம்பாதிக்கவா..? அப்படியென்றால் ஏதாவது கம்பெனி தொடங்கி விடலாமே. அதிலும், மதுபான ஆலைகள் என்றால் கொள்ளை லாபம் கிடைக்கும். என நீங்கள் நினைக்கலாம்.
வேறு எதற்கு கட்சி..? கண்களுக்கு இமை இருப்பதைப் போல..! தூசி விழும் நொடிப் பொழுதில் இமை மூடுவதைப் போல..!
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைந்திட ஓட வேண்டும்.
அதற்கான தகுதியான தலைமை.! அத்தகைய கொள்கை பலம் பொருந்திய கட்சி நமக்கு வேண்டும்.
இப்படி சிந்தித்தவர்கள் இன்றளவும் மறுமலர்ச்சி ஆன நாங்கள் திமுகவில் பயணிக்கின்றோம்.
தலைவர் வைகோ மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று தான் இதுவும். அவர் நிலையாக ஒரு இடத்தில் இருக்க மாட்டார். மாறி, மாறி கூட்டணி வைப்பார். நான் சராசரியாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் எந்தக்கட்சி ஒரு கட்சியுடன் தொடர் கூட்டில் இருக்கிறது. கொஞ்சம் கூகுளில் சர்ச் செய்யுங்கள் என சொல்ல முடியும்.
ஆனால், நான் அப்படி சொல்ல விரும்பவில்லை. யாருடன் கூட்டணியில் இருந்தாலும்.., வைகோ கொள்கையை காவு கொடுத்தாரா..? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை.
இதோ, ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ள மணிவாசகம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறினாலும்., ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று கடந்த 20 வருடங்களாக முன்பே மக்களுக்காக போராடியவர் வைகோ.
இப்படி தீர்ப்புரையில் குறிப்பிட்டவர்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகிய இருவர் தான். அவர்கள் தந்த தீர்ப்புதான் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முற்பகுதியில் குறிப்பிட்டதைப் போல தலைவர் வைகோ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருந்தால்,
ஸ்டெர்லைட் அகர்வால் ஒரு நிமிடம் உங்களைச் சந்திக்க அனுமதி வேண்டும் என்றபோது., சந்தித்திருந்தால்.. மதிமுக இன்னும் பத்து தேர்தலை எதிர்கொண்டு இருக்கும்.
ஆனால், மேற்சொன்ன நீதிபதிகளின் தீர்ப்புரையின் மணிவாசகம்.., திருவாசகமாக வந்திருக்காது. அதையும் தாண்டி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 அப்பாவிகள் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்களே.., அவர்களது ஆன்மா மன்னிக்காது.
ஆங்கிலேயக் கம்பெனிக்காரர்களிடம் கட்டபொம்மன் அன்று கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருந்தால்.., கயத்தாறு கட்டைப் புளியமரத்தில் தூக்கில் தொங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.
மூன்று தலைமுறையாக வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சி. இறுதிக் காலத்தில் பிழைக்க வழியின்றி மண்ணெண்ணை விற்றிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.
மகாத்மா காந்தி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருந்தால். துப்பாக்கிக் குண்டு அவர் மார்பை குறி பார்த்திருக்காது.
மேதகு பிரபாகரன் சிங்களவர்களிடம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருந்தால்… இன்றளவும் அதிகாரம் கோலோச்ச பவனி வந்திருக்க முடியும்.
இவர்கள் யாரும் சாமானியர்கள் அல்ல ., சரித்திர நாயகர்கள்., தன்னை இழந்தும் தம் மக்களைக் காக்க வந்த மீட்பர்கள்.
முல்லைப் பெரியாறு கட்டியவன் கர்னல் பென்னிக் குயிக் கேரளா அணையை உடைக்க முனைந்தபோது பாதுகாத்தவர் வைகோ.
மேற்குத் தொடர்ச்சி மலையை நியூட்ரினோ ஆய்வகமாக்க பிரதமர் ஒதுக்கிய ஆயிரம் கோடி திட்டத்தை இன்றும் நிறுத்தி வைத்திருப்பவர் வைகோ.
காவிரி வேளாண் மண்டலமாக்க கால்கடுக்க நடந்தவர் வைகோ.
கூடங்குளம் நம் தலை மீது வைக்கப்பட்ட வெடிகுண்டு என்று முழங்கி வருபவர் வைகோ.
தலைவர் வைகோ அவரது காலத்திற்கு பின்பும் நிறையத் தேவைப்படுபவர் இல்லை தேடப்படுபவர்.
வைகோவை விமர்சிக்காதீர்கள்., வைகோ அவரை போல ஒரு நாள் வாழ்வது சிரமம்.
வைகோவை தொலைத்து விடாதீர்கள்..! அவர் நம்மை மீட்க வந்த மீட்பர்..!
– லோகேஸ்வரி.வெ