செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்..!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி , சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சையும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அதன் பின் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும், அதற்காக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஈ.சி.ஜி மற்றும் ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு கை, கால் மரத்து போதல் பிரச்சினை இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அதற்கு உரிய சிகிச்சை அளித்து, 22 நாட்களுக்குப் பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதனிடையே அவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் புழல் சிறையில் தனி வார்டில் இருந்த செந்தில் பாலாஜி, சிறை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் அவ்வபோது பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நிலையில் முன்னேற்றம் :
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு மன அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்ததால், மருத்துவர்கள் ஈசிஜி உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகள் மேற்கொண்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை அவரது உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும், மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்திருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று அவருக்கு இருதயம் தொடர்பாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..