அண்ணாமலையின் பாச்சாக்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணாவும் தேவரும்…
அண்ணா பிறப்பு
15.09.1909
தேவர் பிறப்பு
30.10.1909
இருவரும் அறுபது வயது அடையும் முன்பே மறைந்தது ஓர் வரலாற்றுச் சோகம்.. அரசியல் பாலகன் அண்ணாமலை அவர்களே …
இருபதாம் நூற்றாண்டின் தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகன்
பேரறிஞர் அண்ணா அவர்கள் அவர் கருத்தை சொன்னார்… தென்னாட்டின் முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர் அவர்கள் அவர் கருத்தை பிரதிபலித்தார்..
இருவரும் வெவ்வேறு துருவங்கள் தான்.. அவர்களின் கொள்கைகள் வேறு …வேறு … இதில் மன்னிப்பு என்பதற்கான அவசியம் எழவில்லை.. நான் படித்து உணர்ந்த அளவில் ராஜதந்திரம் என்கிற கபட வேட அரசியலை தேவர் அறிந்து இருக்கவில்லை.. மனதில் நினைப்பதை பேசுபவர்.
அண்ணா அவர்களும் அதே பாணி தான்…
பழுத்த வெள்ளரிப்பழத்தைக் கூட பெருவிரல் நகத்தால் கீறுவதற்கு அஞ்சுவேன் என்று சொன்ன மனித நேய மாண்பாளரான, ஆன்மீகச் செம்மல் அய்யா
பசும்பொன் தேவர் அவர்கள், செய்யாத குற்றத்திற்கு சிறையேகி வழக்குகளில் சிக்கிய போது, பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
தேவரை நாங்கள் பாதுகாக்கிறோம் என முன்வரவில்லை..
வரலாறு விடுதலை செய்ய வெளிவந்தார் தேவர் …
அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சிறுகதை மன்னன் எஸ்.எஸ். தென்னரசு திருமணம் நடைபெற இருந்த நாளில் தேவர் காலமானார்… அய்யா தென்னரசு திருமணத்தில் பங்கேற்க அண்ணாவும், என்.வி.என். எம்.ஜி.ஆர். எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் பலரும் இன்றைய பாண்டியன் இரயிலில் வந்து இறங்குகிறார்கள்.
மணமகன் தென்னரசு அவர்களே வரவேற்க வந்துள்ளார். சோகமாக இருந்த தென்னரசுவிடம் புது மாப்பிள்ளை முகத்தில் ஏன் சோகம் என வினவுகிறார் அண்ணா.. பசும்பொன் தேவர் அவர்கள் மறைந்து விட்டார்.. அவருக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் செல்வோம். திருமணத்தை நாளையோ நாளை மறுநாளோ நடத்தி கொள்வோம் என தென்னரசு கூற;
நேராக பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்தி தேவரின் பெருமைகளை எடுத்து பேசி இரங்கல் உரையாற்றி புகழ் வணக்கம் செலுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
(பகை இருப்பின் இது சாத்தியமா) அந்த பெருமை திராவிட இயக்கத்திற்கும், தலைவர் அண்ணாவிற்கும் உண்டு! தேவர் அவர்கள் தீவிர இந்து மத நம்பிக்கையாளர். உண்மையான ஆன்மீக வாதி… முழுமையான பிரமச்சாரி…
பெரியார், அண்ணா கொள்கைகளின் மீது நேர் எதிர் கருத்து கொண்டவர்.
அந்த அடிப்படையில் பல விவாதங்கள் நடந்தது ஆவணங்களில் உள்ளது …..
இன்றைய நாளில் அவற்றைக் கிளற வேண்டிய அவசியமில்லை… ஏன் தலைவர் பெரியாரின் அதிரடி தாக்குதலுக்கு ஒரு கட்டத்தில் ஆளானவர் தான் அவரது தலை மாணாக்கர் அண்ணா… பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா;
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோருக்கும்,
தலைவர் கலைஞருக்கும் அவரது உயிரனைய தம்பியான எம் தலைவர் வைகோ அவர்களுக்கும் அது பொருந்தும்.. மூதறிஞர் ராஜாஜியும் பெருந்தலைவர் காமராஜரும் கருத்து முரண் கொண்டு தாக்கிக் கொண்டவர்கள் தான்.
காமராஜருக்கும் ம.பொ.சிக்கும் கூட இது பொருந்தும்…
தவிர, மகாத்மா காந்தி – நேதாஜி முரண்பாடுகள் உட்பட அரசியல் என்றாலே வெவ்வேறு துருவங்கள் தான்… மாறுபட்ட கருத்துகள்தான்.. இவற்றை எல்லாம் அந்தந்த காலகட்ட அரசியலோடு பொருத்தி பார்த்து அன்றைய அரசியல் இப்படி தான் இருந்துள்ளது என கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதை கிளறி குளிர் காய முனைவது அவசியமற்றது, மக்களிடம் எடுபடாது என்பதோடு அண்ணாமலைக்கு வெள்ளாமை அவ்வளவு தான் என பொதுமக்கள் நினைக்கும் செயலாகவே முடியும்..
அரசியல் பாலகன் அண்ணாமலைக்கு சொல்லி வைக்கிறேன்… ஈடற்ற ஆன்மீகச் செம்மலாக விளங்கிய பெருமகன் பசும்பொன் தேவரை மதிக்கிற 99 விழுக்காடு மக்கள்; ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் ஏதோ ஒரு திராவிட இயக்கத்தைத்
தான் நேசிக்கிறார்கள்.. நேசிப்பார்கள்… உங்க பாச்சாக்கள் எதுவும் அவர்களிடம் என்றும் செல்லுபடியாகாது வரலாறு உணர்த்தும் உண்மை இதுவே என தெரிவித்துள்ளார்.