திருச்செங்கோடு மருத்துவமனையில் குழந்தை விற்பனைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்படுவார், தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் மழைக்கு முன்பான முன்னேற்பாடு பணிகள் குறித்தான கலந்தாலோசனை கூட்டம்
நடைபெற்றது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் , சென்னை குடிநீர் வாரியம் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கந்தசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 4 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
கடந்த மாதம் ஒரு நாள் பெய்த கன மழையால் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் அதிக காயத்துடன் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்றனர். இவர்களுக்கு உதவித்தொகையாக அரசு மருத்துவமனையில் குறைவான சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 3 பேருக்கு தலா 4500 ரூபாயும், கூடுதல் நாட்கள் சிகிச்சை பெற்ற 8 பேருக்கு தலா 12500 ரூபாயும், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் முதலமைச்சர் அரசு பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூட்டம் நடத்துவது வழக்கம். சென்னை மாநகராட்சி அலுவலர்கள் , சென்னை குடிநீர் வாரியம் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் உடன் கலந்தாலோசனை கூட்டம் நடக்கிறது.
வட கிழக்கு பருவமழை பாதிப்பு சைதாப்பேட்டை தொகுதியில் ஏற்படாமல் இருக்க இந்த ஆலோசனை கூட்டம் உதவும். இந்த ஆட்சியில் 878.78 கிலோ மீட்டர் நீளம் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 2898 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
2073.4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மழைநீர் வடிகால் நீளம் முன் இருந்தது. 2952.12 கிலோ மீட்டர் வரை மழைநீர் வடிகால்கள் தற்போது உள்ளது. மழைநீர் வடிகால் பொறுத்தவரை ஒருமுறை கட்டிவிட்டால் மட்டும் போதாது ஆண்டு தோறும் தூர்வாரப்பட வேண்டும்.
1501.45 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரபட்டுள்ளது. இதற்காக 24.55 கோடி மாநகராட்சி சார்பில் செலவு செய்யப்பட்டுள்ளது. 13.56 கிலோ மீட்டர் தூரத்துக்கு 56 கோடி செலவில் சைதாப்பேட்டையில் மட்டும் மழைநீர் வடிகால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் ஒன்றரை கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பொருத்தவரை எல்லா மாநிலங்களிலும் நாடுகளிலும் இருக்கும் ஒன்று. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் சிறிய இடங்களில் கூட நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும். ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை டெங்கு பாதிப்பு ஏற்படும் உயிரிழப்பு ஓரிலக்கமாக இருக்கும்.
இதுவரை டெங்கு பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் உள் தான் உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது 6 ஆயிரம் வரை கூட பாதிப்பு ஏற்படாது என்று நம்புகிறோம். டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, மருந்துகளும் கையிருப்பு உள்ளது.
திருச்செங்கோடு பகுதியில் ஆட்சியர் உமாவுக்கு அங்கு மருத்துவமனையில் மூன்றாவது குழந்தை விற்கப்படுகிறது என்று தகவல் வந்துள்ளது. ஆண் குழந்தை என்றால் 5 ஆயிரம் ரூபாய் பெண் குழந்தை என்றால் 3 ஆயிரம் என்ற அளவில் தரகர்கள் மூலம் விற்கப்படுவதாக தகவல் வந்த பின் காவல் துறையினர் உடன் ரகசிய விசாரணை செய்தார். அதில் லோகாம்பாள் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு உள்ளார். இதற்கு அனுராதா என்ற பெண் மகப்பேறு மருத்துவர் உடந்தையாக இருந்து உள்ளார்.
காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் இணைந்து இது குறித்து தீவிர விசாரணை செய்ய சொல்லி உள்ளோம். நேற்று மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகராக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் மூலம் குழந்தை விற்பனைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர் அனுராதா இன்னும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார், தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து இதில் தொடர்புடையவர்கள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு பின் இதுவரை எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படும்.
பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,
ஏழ்மை நிலையை காரணம் காட்டி குழந்தைகளை விற்கிறார்கள். சட்ட விதிகளின்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது எடுக்கப்படும் என்றார்.