இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவருக்கு வயது 56.
பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிகராக நடித்து வந்தார் மாரிமுத்து. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகர் மாரிமுத்து. வாலி, உதயா, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்த மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்துள்ளார். ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இயக்குனர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். 2011ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராக மாரிமுத்து அறிமுகமானார். இறுதியாக ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் இன்று காலை டப்பிங் முடித்துவிட்டு சாலிகிராமில் உள்ள வீட்டிற்கு செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.