அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிப்பதா அல்லது எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிப்பதா என குழப்பம் நிலவியது.
இதுதொடர்பாக, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமின் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க ஆணையிட்டது. மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கையும், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையின் வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.