12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி செல்வி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்ணான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றைய தினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைந்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Discussion about this post