பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று (15-03-2022) முதல் நாளை மறுநாள் வரை(17-03-2022) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 18-3-2022, 19-03-2022 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும்,நாளையும் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.