தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்!!
தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை தொடரும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 10 சதவிதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.