பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு நிவாரண தொகை..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அடுத்தடுத்து இருந்த பட்டாசு தயாரிப்பு அறைகளும் சேதமானது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களும், ஆறுதல்களும்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ3,00,000 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்