சென்னை கிண்டியில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் கிங்ஸ் மருத்துவமனையை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், தமிழ்நாட்டில் BA.4 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த BA.4 கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையில் உள்ளது. ஒமிக்ரான் திரிபை ‘கவலைக்குரிய திரிபு’ என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இதனால் BA.4 வகை கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியை சேர்ந்தவருக்கு BA.4 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் தெலங்காணா மாநிலத்தில் ஒருவருக்கு இருந்ததை உறுதிசெய்தார்கள். இந்நிலையில் தமிழகத்தில் BA.4 கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சோதனை செய்து தனிமைப் படுத்தியுள்ளோம்.
இதுவரை தமிழகத்தில் நான்கு வகை கொரோனா தொற்றுகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டது. பிற மாநிலங்களில் இந்த புதியவகை தொற்று பரவியுள்ளதா என மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.