தாக்குதலில் ஈடுப்பட்ட கல்லூரி மாணவர்கள்… பறந்த ரயில்வே போலீசார்..!
சென்னையின் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வழக்கம் போல் கல்லூரியை முடித்துவிட்டு திருத்தணி புறநகர் ரெயிலில் திருத்தணி நோக்கி பயணித்து வந்தனர். அப்பொழுது அண்ணனூர் – ஆவடி இடையே ரயில் சிக்னல் காரணமாக நின்றுள்ளது. அப்பொழுது அவ்வழியே சப்தகிரி விரைவு ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர்.
சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருப்பதை கண்ட மாநில கல்லூரி மாணவர்கள் விரைவு ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி அதிலிருந்து இறங்கி வந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தண்டவாளத்தில் இருந்த கற்களை கொண்டு தாக்கி உள்ளனர். இதில் இரயில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளது.
இது குறித்து இரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த ஆவடி இரயில்வே போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுவிட்டு அவ்வழியே வந்த மாநில கல்லூரி மாணவர்கள் ஐயப்பன், வல்லரசு, சரத், ஜெகன் ஆகியோர் ஆவடி இரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நடத்திய தாக்குதலின் செல்போன் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் முகத்தை மூடி கொண்டு மாணவர்கள் கும்பலாக விரைவு ரயில் இருந்து இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் இரயில் மீது கற்களை வீசி தாக்குவதும், பொதுமக்கள் பயத்தில் அலறி ஜன்னல்களை மூடுவதும் பதிவாகியுள்ளது.
-பவானி கார்த்திக்