தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் ஒன்றிய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்திருக்கிறார்.
ரேஷன் கடைகளில் கொடுக்கும் பொருட்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அனைத்து கடைகளிலும் மானிய விலையில் வழங்கப்படும் எண்ணெய் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பாமாயில் உடல் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதற்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் இதன் மூலம் தென்னை விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் விளைவாக, முதற்கட்டமாக தமிழகத்தின் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் விரைவில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் எனவும், பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்து இதனை தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்துவது பற்றி பரிசீலித்து முடிவு செய்யப்படும் எனவும் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்திருக்கிறார்.
இதனால், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை கூடிய விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் தேங்காய் எண்ணெய் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.