தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய நிலையில , அது தொடர்பான வேலை நிமித்தமாக திருவனந்தபுரம் சென்று விட்டு நெல்லைக்கு காரில் திரும்பி கொண்டிருந்த போது விபத்து நடந்தது. இதில் தனியார் தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த நெல்லை மாவட்ட செய்தியாளர் நாகராஜ், மற்றொரு தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் உள்ளிட்ட 3 பேர் காயங்களுடன் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டி வந்தது சங்கர்தான் என்றும், செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர்கள் நாராயண மூர்த்தி, வள்ளிநாயகம் ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். கார் விபத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிரிழந்தது ஊடக உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “
நங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post