கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல்… இருவர் வெட்டிக்கொலை..!
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது.
அந்த வகையில் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வண்டலூர் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்தில், ஹரி என்ற ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் நேரடியாக வந்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
நள்ளிரவில் இரண்டு இளைஞர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகவும், இரண்டு இளைஞர்களையும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தாம்பரம் அருகே பெருங்களத்தூர் அடுத்துள்ள, குண்டுமேடு சுடுகாடு மற்றும் உரக்கிடங்கு அருகே, ஆட்டோ ஓட்டுனர் அரி அண்ணாமலை மற்றும் ஜில்லா என்கிற தமிழரசன் ஆகிய இருவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஐந்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து இளைஞர்களுக்கு இடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென அங்கிருந்து சிலர் அண்ணாமலை ஜில்லா என்கிற தமிழரசன் ஆகிய இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் கொலை நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலை சம்பவத்தில் சோனை என்கிற கோபாலகிருஷ்ணன் கோஷ்டியினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சென்னை புறநகரில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்