சாலை மோசமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்,
வடகிழக்கு பருவமழையை நம்பியே தமிழகம் உள்ளது. சாலை மோசமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன். இனி சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.
சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்பதை கண்டிப்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
Discussion about this post